சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் பஸ், ரெயில்கள் மூலம் 13 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சென்னையில் மட்டும் சுமார் 1 கோடிக்கும் மேல் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர், பணி, தொழில் மற்றும் கல்விக்காக சென்னையை வாழ்விடமாக கொண்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். இதுபோன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக கடந்த 3 நாட்களாக வழக்கமாக இயக்கப்படும் 6 ஆயிரத்து 276 சிறப்பு பஸ்களுடன் கூடுதலாக 7 ஆயிரத்து 740 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 86 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில், சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பஸ் நிலையங்களில் இருந்து மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதலாக 4 ஆயிரத்து 900 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் சென்னையில் இருந்து மட்டும் கடந்த 3 நாட்களில் சுமார் 5 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று இருக்கின்றனர். முதல் 2 நாட்களில் பெரும்பாலானோர் சென்னையில் இருந்து சென்றுவிட்டதால் நேற்றைய தினம் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் பயணித்தனர்.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்களை போல, தனியார் ஆம்னி பஸ்களும் கடந்த 3 நாட்களில் அதிக அளவில் இயக்கப்பட்டுள்ளன. இதிலும் பலர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.
அந்த வகையில் கடந்த 28-ந் தேதி 1,025 ஆம்னி பஸ்களில் 41 ஆயிரம் பயணிகளும்,29-ந்தேதி 1,800 ஆம்னி பஸ்களில் 72 ஆயிரம் பயணிகளும், 30-ந்தேதி (அதாவது நேற்று) 1,600 ஆம்னி பஸ்களில் 64 ஆயிரம் பயணிகளும் என மொத்தம் ஒரு லட்சத்து 77 ஆயிரம் பேர் பயணித்து இருப்பதாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
மொத்தத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து பஸ், ரெயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதுதவிர பலர் சொந்த கார்களிலும், வாடகை கார்களிலும், மேலும் சில விமானங்களிலும் சென்று இருக்கின்றனர்.