பெங்களூரு: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 741 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குடகு, மைசூரு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. தற்போது 1,30,741 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கேஆர்எஸ் அணையில் இருந்து 1,00,741 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
ஒகேனக்கல்
தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 95 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.