சென்னை: இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதால், தினமும் சராசரியாக 5,900 டன் திடக்கழிவுகள் அகற்றப்படுகின்றன. மாநகராட்சி பகுதிகளில் தீவிர துப்புரவு பணியின் கீழ், சாலையோரங்கள் மற்றும் சாலை மீடியன்களில் உள்ள குப்பை, கட்டுமான கழிவுகள், மண் மற்றும் குப்பைகளை அகற்றுதல், நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களில் உள்ள வண்டல்களை தூர்வாருதல், பூங்காக்களை சுத்தம் செய்தல், அகற்றுதல் உள்ளிட்ட துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பயணிகளின் வசதிக்காகவும், நகரை தூய்மையாக வைத்திருக்கும் வகையிலும் அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் முதற்கட்டமாக ஆகஸ்ட் 21-ம் தேதி தீவிர துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை 15 மண்டலங்களிலும் உள்ள 1,363 பேருந்து நிறுத்தங்களில் 2-ம் கட்ட தீவிர துப்புரவு பணி ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.
இப்பணிகளில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை அகற்றுதல், சுவரொட்டிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத விளம்பர பதாகைகளை அகற்றுதல், இருக்கைகள் மற்றும் பேருந்து நிறுத்தத்தின் முன் மற்றும் பின்புறம் சுத்தம் செய்தல், பேருந்து நிழற்குடை முழுவதையும் தண்ணீரில் சுத்தம் செய்தல், நிழற்குடைகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை அளவிடுதல் மற்றும் மதிப்பீடு செய்தல் முதலியன செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.