சென்னை: நாடு முழுவதும் நாளை (அக்டோபர் 20) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை நகரிலிருந்து மக்கள் பெருமளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும் காட்சிகள் இடம் பெற்றன.

போக்குவரத்து துறை மற்றும் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 6,15,992 பேர் பேருந்து மூலம் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதற்காக வழக்கமான 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 2,834 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மொத்தம் 6,920 பேருந்துகள் கடந்த மூன்று நாட்களில் பயணிகளை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றன.
அதேபோல், 9.5 லட்சம் பேர் ரயில்களில், 2 லட்சம் பேர் ஆம்னி பேருந்துகளில் மற்றும் 1.5 லட்சம் பேர் சொந்த வாகனங்களில் புறப்பட்டுள்ளனர். இதனால் மொத்தம் சுமார் 18 லட்சம் பேர் சென்னையிலிருந்து தீபாவளி கொண்டாட்டத்துக்காக சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் விளைவாக, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சாலைகளில் வாகன நெரிசல் கடுமையாக காணப்பட்டது.
தீபாவளி பண்டிகை வார இறுதி விடுமுறையுடன் இணைந்திருப்பதால், மக்கள் நீண்ட விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். தற்போது சென்னை நகரம் வழக்கத்தை விட அமைதியாகவும், குறைந்த மக்கள் தொகையுடனும் காணப்படுகிறது. மக்களின் உற்சாகம் தீபாவளி பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடும் ஆவலில் வெளிப்படுகிறது.