சென்னை: மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் கீழ் செயல்படும் அகில இந்திய மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு சார்பில், அரசு பஸ்களை சிறப்பாக இயக்கிய மாநிலங்களுக்கு தேசிய பொது போக்குவரத்து விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. அகில இந்திய அரசு சாலை போக்குவரத்து தொழிற்சங்கம் வழங்கிய விருதுகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 19 விருதுகளை பெற்றுள்ளது.
அகில இந்திய அளவில் சிறந்த சாலைப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல், அகில இந்திய அளவில் சிறந்த நிதி நடைமுறைகளைப் பின்பற்றுவதில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் பணியாளர் உற்பத்தித்திறன் விருது பெற்றுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் டிஜிட்டல் பரிவர்த்தனை விருதையும் பெற்றுள்ளது. வாகனப் பயன்பாடு (கிராமப்புறம்) அடிப்படையில், மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. கிராம அளவில் எரிபொருளை திறமையாக பயன்படுத்தியதற்காக TNSTC விழுப்புரம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
மேலும் 38 பிரிவுகளில் 12 பிரிவுகளில் முதல் பரிசும், 31 பிரிவுகளில் 7 பிரிவுகள் இரண்டாம் பரிசும் என மொத்தம் 69 பிரிவுகளில் 19 பிரிவுகளில் தமிழ்நாடு போக்குவரத்து கழகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.