சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த காலத்தில் பெறப்பட்ட 23.09 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலைத் தகுதிபெறும் நாளாக அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி திருத்தியமைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், நல்ல தரமான புகைப்படங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின், அக்., 29-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பின், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள், நவ., 28 வரை பெறப்பட்டன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும், 16, 17-ம் தேதிகளில், 69 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில், சிறப்பு முகாம் நடந்தது. மற்றும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த 4 நாள் முகாம்களில் பெயர் சேர்க்க 8,38,016, வெளிநாடு வாழ் இந்தியர்களின் பெயர் சேர்க்க 4, ஆதார் இணைக்க 783, பெயர் நீக்க 1,19,701, திருத்தம் செய்ய 4,42,111 என மொத்தம் 14 லட்சத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதுதவிர தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த வகையில் அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 வரை சிறப்பு முகாம்கள் மற்றும் நேரில் வந்த விண்ணப்பங்கள் 17 லட்சத்து 70 ஆயிரத்து 901, ஆன்லைன் மூலம் 5 லட்சத்து 38 ஆயிரத்து 490 விண்ணப்பங்கள் என மொத்தம் 23 லட்சத்து 9 ஆயிரத்து 391 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் பெயர் சேர்க்க 1,08,872 விண்ணப்பங்களும், பெயர் சேர்க்க 9,22,372 விண்ணப்பங்களும் நேரடியாகவும், 2,69,200 விண்ணப்பங்கள் பெயர் நீக்கவும், 2,81,915 நேரடியாகவும், 1,60,372 விண்ணப்பங்கள் முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்ய ஆன்லைனில் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நவம்பர் 29-ம் தேதி தொடங்கி டிசம்பர் 24-ம் தேதி வரை பரிசீலனை செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதன்பின், தேசிய வாக்காளர் தினத்தன்று புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.