சென்னை: சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு, 2,449 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
சுதந்திர தினம் மற்றும் ஆகஸ்ட் 15-ம் தேதி விடுமுறையை முன்னிட்டு, ஆகஸ்ட் 13, 14 மற்றும் 15-ம் தேதிகளில் சென்னையின் கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக 1,320 பேருந்துகள் இயக்கப்படும்.

ஆகஸ்ட் 14 மற்றும் 15-ம் தேதிகளில் கோயம்புத்தூரிலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூருக்கு 190 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து 24 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். இதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் ஆகஸ்ட் 17-ம் தேதி வீடு திரும்ப வசதியாக 715 பேருந்துகள் இயக்கப்படும், மொத்தம் 2,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதுமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதியில் பேருந்துகளில் பயணிக்க 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.