கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி. நாயுடு மேம்பாலம் கடந்த வாரம் திறக்கப்பட்டது. மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் திறந்த பாலத்தில் இன்று மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. அதிவேகமாக பயணிக்கும் வாகனங்கள், போதிய பாதுகாப்பு வசதிகளின்மை மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் இல்லாதது இந்த விபத்துக்கு காரணமாக குறிப்பிடப்படுகிறது. விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
முதல் விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் உசைன், ஆரிஃப் மற்றும் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யபிரியா ஆகியோர் என தெரிய வந்தது. அவர்களது வயது 20-க்கு குறைவாக இருந்தது. காரின் தொழில்நுட்ப கோளாறும் அதிவேகமும் விபத்திற்கு நேரடியாக காரணமானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. புதிய பாலத்தில் அதிகளவு வாகனங்கள் வேகமாக பயணித்ததால் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் இயக்கத்தினரும் வேகக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு கருவிகளை பாலத்தில் நிறுவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்கள் உடனடியாக தகவல் தொழில்நுட்பம் மூலம் பகிரப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். பாலத்தின் ஏறுதல், இறங்குதல் பகுதிகள் பற்றிய அறிவிப்பு பலகைகள் இல்லாமை பிரச்சனையாக உள்ளது.
அரசும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. புதிய பாலத்தில் பயணிப்பவர்கள் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்பதும் அவசியம். இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் உயிர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். புதிய மேம்பாலங்கள் திறந்தவுடன், பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்படாதால் தொடர்ச்சியான விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.