சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில், அடுத்த வாரம் ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ரயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்றவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தீபாவளி நெருங்குவதால், சில வியாபாரிகள் அல்லது பயணிகள் பட்டாசுகளை எடுத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். இதை தவிர்க்க, ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதேபோல், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், மாம்பலம், கிண்டி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:-
ரயில்களில் வெடி, பட்டாசு உள்ளிட்ட எரிபொருள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயணிகள் பட்டாசுகளை எடுத்துச் செல்ல முயற்சிப்பதில்லை. இருப்பினும், சிலர் விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், அவர்கள் மட்டுமின்றி, மற்ற பயணிகளும் அவதிப்படுகின்றனர். விதிகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் முறையாக ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை. தொடர்ந்து மீறினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5,000 வரை அபராதம் விதிக்கப்படும். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், ரயில்களில் பாதுகாப்பான பயணம் குறித்து ஆர்பிஎப் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடுத்த வாரம் நடத்தவுள்ளோம்.
பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க நவீன ஸ்கேனர்கள், மெட்டல் டிடெக்டர்கள் மூலம் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.