சென்னை: சென்னையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 13,000 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 65,000 தொண்டர்கள் தயாராக உள்ளனர்.
தேவைப்பட்டால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவார்கள்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
சென்னையில் 89 படகுகளும், பிற மாவட்டங்களில் 130 படகுகளும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. சென்னையில் 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
மொத்தம் 931 மையங்கள் தற்போது தயார் நிலையில் உள்ளன. வெள்ளத்தை கண்காணிக்க சென்னையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளும், அனைத்து மாவட்டங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், மருத்துவத் துறை மற்றும் மாநகராட்சி இணைந்து தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் தமிழ்நாடு பருவமழை சிறப்பு மருத்துவ முகாம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 100 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 13,000 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 65,000 தொண்டர்கள் தயாராக உள்ளனர். தேவைப்பட்டால் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபடுவார்கள்.
சென்னையில் மொத்தம் 8 மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என்று நேற்று அறிவுறுத்தப்பட்டது என்பதை இன்று மீண்டும் வலியுறுத்துகிறோம்.
காரணம், நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளி விடுமுறை குறித்து தமிழக முதல்வர் இன்று மாலைக்குள் முடிவெடுத்து அறிவிப்பார்.
மேலும், மழை நின்றால் கணேசபுரம், பெரம்பூர் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் அகற்றப்படும்” என்றார்.