சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கழகம் (சிஎம்ஆர்எல்) சார்பில் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் இன்று காலை 8 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை (32 மணி நேரம்) மண்டலம் 4, 5, 6, 8, 9 ஆகிய பகுதிகளில் குடிநீர் இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சில பகுதிகளில் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் மெயின் இணைக்கும் பணி இன்று நடப்பதால், தண்டையார்பேட்டை, புரசைவாக்கம், பெரியமேடு, சவுகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லீஸ், திருவல்லிக்கேணி 32 மணி நேரம் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் குடிநீரை போதுமான அளவு சேமித்து வைக்க வேண்டும். வாரியத்தின் இணையதளமான https://cmwssb.tn.gov.in-ல் அவசர தேவைகளுக்கு (டயல் ஃபார் வாட்டர்) லாரிகள் மூலம் குடிநீரைப் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் குறைந்த அழுத்தம் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் லாரிகள் வழங்கப்படும்.