சென்னை: ஹஜ் பயணம் முடிந்து 326 யாத்ரீகர்கள் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா மதீனாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்கின்றனர். அதன்படி இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 5801பேர் பயணம் செய்துள்ளனர்.
ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் கடந்த மாதம் 25ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் 170 பெண்கள் உள்பட 326 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், ஹஜ் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று மதியம் முதல் விமானம் 326 பயணிகளுடன் சென்னை வந்தது.
அவர்களை தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த ஆண்டு புனித ஹஜ்ஜுக்கு தமிழகத்தில் இருந்து 5,801 பேர் சென்றனர். முதல் விமானத்தில் வந்த 326 பேரை வரவேற்கிறோம். புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. ஹஜ் யாத்திரையின் போது வெயிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
மக்காவிலிருந்து மதீனா நோக்கிச் சென்ற பேருந்து விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹஜ் பயணிகளுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மூலம், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.