தஞ்சாவூர்: அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை, அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 385 பேர் போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு, சங்க மாவட்ட செயலாளர் சங்கீதா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் லட்சுமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக உடனடியாக அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உடனடி நிரந்தர பதவி உயர்வு வழங்கி, குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் என அறிவிக்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு 100 நாள் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், உதவியாளர்களுக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதிய நலன்கள் வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஊழியர்கள், உதவியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 385 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை போலீஸார் கைது செய்தனர்.