சென்னை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக இரண்டு நாட்களுக்கும் மேலாக சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 4-ம் தேதி விரைவு பஸ்களின் முன்பதிவு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியது. இரவு வரை கிளாம்பாக்கில் இருந்து பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் நேற்று பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இதனால் கோயம்பேடு – மதுரவாயல் சாலையில் மதியம் முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுதவிர விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜை பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் முக்கிய சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக ஜிஎஸ்டி சாலை, தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது. 10-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து செல்லும் வழக்கமான விரைவு ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏறும் அவசரம் ஏற்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில், சிலர் படிக்கட்டில் நின்று பயணித்தனர். இதனால் நேற்று மட்டும் மொத்தம் 4.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பேருந்துகள் மற்றும் ரயில்களில் சொந்த ஊருக்கு சென்றனர்.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், “பயணிகளின் வருகையை, தொடர்ந்து கண்காணித்து, பஸ்களை இயக்க, அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். பயணிகள் வீடு திரும்ப, போதிய பஸ்கள் இயக்கப்படும்,” என்றார்.