சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் 48-வது புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 12-ம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெறும். இதில், தினகரன் – சூரியன் பதிப்பகத்திற்கு, 329 மற்றும் 330 என, இரண்டு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தமிழக அரசு அமைத்துள்ள பந்தல்கள் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலில் சைவம், வைணவம், சிற்பங்கள், நாயன்மார் கதைகள், விவேகானந்தர் கதைகள், ராமானுஜ கதைகள், திருப்புகழ், திருவள்ளுவர், சேக்கிழார் உள்ளிட்ட நூல்கள் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் பக்தி நூல்களை அதிக அளவில் வாங்குவதாகவும், கோவில் தலங்களில் உள்ள புத்தகங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் ஸ்டால் வைத்திருப்பவர் தெரிவித்தார்.
அதேபோல், முதன்முறையாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. புத்த மதம், அம்பேத்கர் வரலாறு, பகுத்தறிவு நூல்கள், ஆதி திராவிட எழுத்தாளர்களின் புத்தகங்கள், சிறுகதைகள் உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என ஸ்டால் நடத்துபவர் விஜய்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அமைத்துள்ள ஸ்டாலில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் வாங்கிச் செல்கின்றனர். முதல் 7 நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வந்துள்ளனர். கற்பித்தலும் நிற்பும் என்ற தலைப்பில் சுகி சிவம், தமிழ் என்ற தலைப்பில் கதை மூலம் கற்றல் என்ற தலைப்பில் ஆறு.அழகப்பன், கதை மூலம் கற்றல் என்ற தலைப்பில் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேச உள்ளனர்.