சென்னை: அமிர்த் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், சென்னை கிண்டி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘அமிர்த் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின்’ கீழ், தெற்கு ரயில்வேயில் 116 ரயில் நிலையங்கள் மேம்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 17 ரயில் நிலையங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள சென்னை கடற்கரை, பூங்கா, பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவற்றில் ஒன்றான கிண்டி ரயில் நிலையம் பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் கிண்டியில் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு மின்சார ரயிலில் செல்வோர் வசதியாக கிண்டி ரயில் நிலையம் உள்ளது.
13.50 கோடியில் சீரமைப்பு: இதுதவிர, ரேஸ் கிளப், கிண்டி தேசிய பூங்கா, தொழில் பூங்கா, காந்தி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோருக்கு வசதியாக கிண்டி ரயில் நிலையம் உள்ளது. இந்திரா ரயில் நிலையத்திற்கு தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையம் ரூ.13.50 கோடியில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக புதிய டிக்கெட் பதிவு அலுவலகம் அமைக்கப்பட உள்ளது. ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக நடைமேடைகள் மேம்படுத்தப்படும். ரயில் நிலைய நடைமேடைகளில் பழைய மேற்கூரைகள் அகற்றப்பட்டு புதிய மேற்கூரைகள் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் மூத்த குடிமக்கள் எளிதில் செல்ல 3 மின்தூக்கிகள் அமைக்கப்படும். பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, ரயில் நிலையத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
மின்தூக்கி கட்டுமானம்: நிலையத்தின் 3 மற்றும் 4வது நடைமேடைகளில் மின்தூக்கிகள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. அதே நேரத்தில், 1 மற்றும் 2 தளங்களில் லிஃப்ட் நிறுவும் பணி நடந்து வருகிறது. இதுவரை 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து செப்டம்பரில் தயாராகிவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.