சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
சென்னை மாநகராட்சியின் கீழ் விதிமீறி குப்பை கொட்டுவது, பொது இடங்களில் கட்டடக் கழிவுகள், திடக்கழிவு மேலாண்மையை முறையாகக் கடைப்பிடிக்காமல் இருப்பவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விதிகளின் அடிப்படையில் மாநகராட்சி அபராதம் விதித்து வருகிறது.
இந்நிலையில், பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதை தவிர்க்கவும், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும், கடந்த 5 ஆண்டுகளாக அமலில் இருந்த அபராத தொகை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பை கொட்டுதல், வாகனங்களில் இருந்து குப்பை கொட்டுதல் போன்றவற்றுக்கு அபராதம் ரூ.500-ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், தனியார் வீடுகளில் மக்காத குப்பைகளுக்கு ரூ.100 முதல் ரூ.1,000 வரையிலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.5,000 வரையிலும் அபராதம் விதிக்கப்படும். கட்டட கழிவுகளை அனுமதியின்றி பொது இடங்களில் கொட்டுபவர்கள்,
சாக்கடை, நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுபவர்கள், தனியார் மற்றும் பொது இடங்களில் திடக்கழிவுகளை எரிப்பவர்களுக்கு அபராதம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மரக்கழிவுகளை கொட்டினால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இதுதவிர மீன் வளர்ப்பு மற்றும் இறைச்சி கழிவுகளை தரம் பிரிக்காமல் கொடுப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், கடைக்காரர்கள், விற்பனையாளர்கள் குப்பை தொட்டி வைக்காமல் இருந்தால் ரூ.1000, குப்பைகளை தரம் பிரிக்காமல் இருந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், பொது நிகழ்ச்சி நடந்த இடங்களில் 12 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்யாவிட்டால் ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்படும். எனவே, சென்னை மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும்.
வீடு, கடைகளில் குப்பை சேகரிக்க வரும் துப்புரவு பணியாளர்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என முறையாக பிரித்து தர வேண்டும். கட்டுமான கழிவுகளை குறிப்பிட்ட இடத்தில் கொட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.