சென்னை மதுரவாயல்–துறைமுகம் இரட்டை அடுக்கு சாலை திட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் 2027ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் நிறைவடையும் என்று நெடுஞ்சாலை ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 19 கிலோமீட்டர் நீளத்தில், கூவம் ஆற்றின் கரையை ஒட்டி கோயம்பேடு வரை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் 2011இல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு சுற்றுச்சூழல் காரணங்களால் திட்டத்தை நிறுத்தியது. பின்னர் மோடி அரசு திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்தது.

5570 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் இந்தச் சாலை நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத்துக்கு ரூ.1388.59 கோடி, இரண்டாம் கட்டத்துக்கு ரூ.1616.97 கோடி, மூன்றாம் கட்டத்துக்கு ரூ.1299.36 கோடி, நான்காம் கட்டத்துக்கு ரூ.1205.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மும்பை நிறுவனமொன்று பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இரட்டை அடுக்கு மேம்பாலத்தில், முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்களுக்கு பாதை இருக்கும். இரண்டாம் அடுக்கு, நேரடியாக துறைமுகத்துக்குச் செல்லும் கனரக வாகனங்களுக்கு மட்டுமே. இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்து, மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை செல்லும் நேரம் வெறும் 20 நிமிடங்களுக்கு குறைய வாய்ப்புள்ளது.