சென்னை: பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கல்வி மற்றும் வேலைக்காக வெளியூரில் வசித்து வருபவர்கள் குடும்படுத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வார்கள்.
பொங்கல் பண்டிகை(14.01.2025), திருவள்ளுவர் தினம்(15.01.2025), உழவர் திருநாள்(16.01.2025) என தொடர்ந்து 3 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. மறுநாள், (17.01.2025)வெள்ளிக்கிழமை வேலை நாளாக இருப்பதால் சொந்த ஊருக்கு செல்பவர்கள் அன்றைய தினம் இரவே கிளம்ப வேண்டிய நிலை உள்ளது.
மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை கிடைத்தால் அடுத்த வரும் சனி, ஞாயிறு சேர்த்து மொத்தம் 6 நாட்கள் பொங்கலுக்கு விடுமுறை கிடைக்கும். இதனால் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கைகளை ஏற்று வெள்ளிக்கிழமை (17.01.2025) தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக, 25.01.2025 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.