சென்னை: பாதுகாப்பு கருதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
ஆனால் நேற்று இரவு ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் நேற்று வழக்கம்போல் விமான சேவை தொடங்கியது.
இருப்பினும், பல பயணிகள் விமானம் செல்ல முன்வராததால், பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதனால், 4 புறப்படும் விமானங்கள், 4 வருகை விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி நேற்று அதிகாலை 4.40 மணிக்கு சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 5.50 மணிக்கு மதுரைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 9.40 மணிக்கு திருச்சிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மதியம் 2.15 மணிக்கு டெல்லி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது.
மேலும், மதுரையில் இருந்து காலை 9.10 மணிக்கு வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், 9.30 மணிக்கு அந்தமானில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 12.10 மணிக்கு திருச்சியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மதியம் 1.25 மணிக்கு டெல்லியில் இருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் என 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பயணிகள் பற்றாக்குறையால் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் சென்னை விமான நிலையத்தில் வழக்கமான பயணிகளுடன் வழக்கமான விமான சேவைகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.