ஊட்டி: நீலகிரி மாவட்டம் அதிக வனப்பரப்பைக் கொண்ட மாவட்டம். இந்த காடுகளில் புலிகள், சிறுத்தைகள், காட்டு மாடுகள், கரடிகள், யானைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.
அதே நேரத்தில், பெரும்பாலான கிராமப் பகுதிகள் காடுகளை ஒட்டியே அமைந்துள்ளன. தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, காடுகள் இல்லாததால் கிராமப்புறங்களில் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிவதை காணலாம்.
மேலும் பல்வேறு தேயிலை தோட்டங்களை வாங்கிய பெரும் பணக்காரர்கள் அவற்றை சுற்றி வேலி அமைத்துள்ளனர். இதனால் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், பழங்கள் சீசன் என்பதால் வனப்பகுதியில் இருந்து கரடிகள் குடியிருப்பு பகுதிக்கு வந்து இந்த பழங்களை உண்கின்றன. இந்நிலையில், குன்னூர் சப்ளை டெப்போ குடியிருப்பு பகுதியில் உள்ள மரத்தில் இரவில் கரடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே, அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.