வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னைக்கு வடக்கே ஆந்திரா கடற்கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்தது.
இதைத் தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மாலை 5.30 மணியளவில் தெற்கு ஆந்திரா கடற்கரை அருகே நிலைகொண்டது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
முதலில் காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது. இருப்பினும், இந்த மண்டலம் வடக்கே ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால், சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் மழை பெய்யவில்லை.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் நிலையில் இன்று மழை இல்லை. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின.
இருப்பினும் பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று இரவு முதல் நாளை காலை வரை சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.