காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனிபகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வாக்ய பஞ்சாங்க முறைப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, இக்கோயிலில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். இந்நிலையில் நேற்று திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி நடந்ததாலும், நாட்டில் பெரும்பாலானோர் திருக்கணித பஞ்சாங்கத்தை பின்பற்றுவதாலும் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதேநேரம் நேற்றும் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நளன் தீர்த்த குளத்தில் புனித நீராடி, நளன் காளி தீர்த்த விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து, தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால், கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.