சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 2 நாட்கள் முன்னதாக மே 30-ம் தேதி தொடங்கியது.
பின்னர் படிப்படியாக முன்னேறி ஜூலை 2-வது வாரத்தில் வட மாநிலங்களில் மிகவும் தாமதமாக தீவிரமடைந்தது. டெல்லி, குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ள நிலையில் தற்போது பருவமழை முடிவுக்கு வருகிறது.
ராஜஸ்தானின் சில பகுதிகளில் நாளை (செப்டம்பர் 23) தென்மேற்கு பருவமழை விலக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு வங்கத்தில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டலத்தில் குறைந்த சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், 24-ம் தேதி ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை சோழிங்கநல்லூரில் 17 செ.மீ., செங்கல்பட்டுமாவட்டம் தாம்பரத்தில் 6 செ.மீ., விஐடி (கேளம்பாக்கம்), பெரும்புதூரில் 5 செ.மீ., சென்னை அண்ணா பல்கலைக்கழகம், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்கிழக்கு கடலோர பகுதிகள் மற்றும் குமரிகடலை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.