சென்னை: உடல் பருமனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இன்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் போராடி வருகின்றனர். ஊட்டச்சத்துள்ள குறைந்த கலோரி உணவுகளை சாப்பிடுவதுடன் போதிய உடற்பயிற்சி செய்தால் உடல் எடையைக் குறைக்கலாம்.
அந்தவகையில், ஊட்டச்சத்துக்கள், நல்ல ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த அவோகேடா (வெண்ணெய் பழம்) உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.
அவோகேடாவில் அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின் சி, ஈ, கே மற்றும் பி நிறைந்துள்ளன. ஒரு அவோகேடாவில் 114 கலோரிகள் மட்டுமே உள்ளது. குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக்(சர்க்கரை அளவு) கொண்டுள்ளது. நிறைவுறா கொழுப்பை நிறைவுற்ற கொழுப்பாக மாற்றி இன்சுலின் அளவை மேம்படுத்தி டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, பசியைக் குறைக்கிறது. இதனால் உண்ணும் உணவின் அளவு குறைகிறது. நார்ச்சத்து நிறைந்தது.
குடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இதய நோய், பக்கவாதம், குடல் புற்றுநோய், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன் உள்ளிட்டவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது.
தனியாக பழச்சாறாகவும் அல்லது சாலட், ரொட்டி, சூப் ஆகியவற்றுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.