ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே கடலோர காவல் படை நடத்திய சோதனையில் ரூ. 58 லட்சம் மதிப்புள்ள கடத்தல் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல் படை, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய கடத்தல் தடுப்பு நடவடிக்கை மூலம் 145 கிலோ எடை கொண்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக இந்திய கடலோர காவல் படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
மண்டபம் வட வேதாளை கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான செயல்கள் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், கடலோர காவல் படையின் மண்டபம் முகாம் சார்பில் உடனடியாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதன்மூலம், கடத்தப்படவிருந்த இந்த கடல் அட்டைகள் சிக்கின. இவற்றின் சந்தை மதிப்பு ரூ 58 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதுகாக்கப்பட்ட கடல் வாழ் உயிரினமான கடல் அட்டைகள் சட்டவிரோதமாக கடத்தப்பட இருந்தது தடுக்கப்பட்டுள்ளது. இது கடல்சார் வளங்களை பாதுகாப்பதில் இந்திய கடலோர காவல் படை கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
சட்டவிரோத கடத்தலை தடுத்தல், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அருகி வரும் கடல் சார் உயிரினங்களை பாதுகாத்தல் போன்ற உயரிய நடவடிக்கைகளில் இந்திய கடலோர காவல் படை தொடர்ந்து ஈடுபடுவதையும் இது குறிக்கிறது.
நாட்டின் கடல்சார் நலன்களையும் கடல் சார் இயற்கை பாரம்பரியத்தையும் காக்க எப்போதும் விழிப்புடன் பணியாற்ற இந்திய கடலோர காவல் படை உறுதி கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.