மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் வாழைத்தோட்டம் என்ற மலைப்பகுதி உள்ளது. இப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலை அடையலாம். கடந்த பிப்ரவரி மாதம் இவ்வழியாகச் சென்ற மதுரை இயற்கைப் பாதுகாப்புக் குழுவினர், கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் அரிய வகை ‘இலங்கை ஐந்து வளைய பட்டாம்பூச்சி’யைப் பார்த்து ஆவணப்படுத்தினர். இதுகுறித்து குழு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ச.குமரேசன் கூறியதாவது:-
மதுரை இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ந்து சென்று கள ஆய்வு செய்து மாவட்டத்தின் பல்லுயிர் தன்மையை ஆவணப்படுத்தி வருகிறது. இதன் நீட்சியாக கடந்த மாதம் சதுரகிரி மலைப் பாதையில் ‘இலங்கை ஐந்து வளையங்கள் கொண்ட பட்டாம்பூச்சி’யை கண்டு ஆவணப்படுத்தியது. இந்த வண்ணத்துப்பூச்சி இலங்கை மற்றும் தென்னிந்திய தீபகற்பத்தில் மட்டுமே காணப்படுகிறது. இது ஒரு அரிய வகை. இது பொதுவாக புல்வெளிகள் கொண்ட மலைப் பகுதிகளில் காணப்படும்.

ஏற்கனவே கோவை, ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளிலும், மேகமலை வனப்பகுதிகளிலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில், சதுரகிரி மலைப் பாதையில் மஞ்சள் கருஞ்சிறகு, ஐந்து வரி வளைய பட்டாம்பூச்சி, மலபார் புள்ளி இலைப்புழு, சிறிய கருப்பு-மஞ்சள் துருத்தி, மர-இரத்த வண்ணத்துப்பூச்சி, பெரிய கண் புஷ் பழுப்பு வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட 52 வகையான பட்டாம்பூச்சிகளை ஆவணப்படுத்தினோம். சதுரகிரி மலை ஆன்மிகத் தலமாக மட்டுமின்றி, பல்லுயிர் பெருக்கம் நிறைந்த இடமாகவும் விளங்குகிறது.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 164 வகையான வண்ணத்துப்பூச்சிகளை எங்கள் குழு ஆவணப்படுத்தியுள்ளது. வண்ணத்துப்பூச்சிகள்-இயற்கை தாவரங்கள்-சுற்றுச்சூழலுக்கு இடையே உள்ள தொடர்பை மாணவர்களும், பொதுமக்களும் புரிந்துகொள்ளும் வகையில் மதுரையில் இயற்கை வண்ணத்துப்பூச்சி பூங்கா ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் வன அலுவலரிடம் மனு அளித்துள்ளோம், என்றார்.