
சென்னை: இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கும். தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளது.
மேலும், பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது இன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை-தமிழக கடற்கரையை நோக்கி வரும் 12-ம் தேதி நகரும்.

இந்நிகழ்வு காரணமாக இன்று முதல் 10-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். 11-ம் தேதி கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். குறிப்பாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
12-ம் தேதி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்பதால், மேற்கண்ட பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்.