கோவை: கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய காடுகளில் காட்டு யானைகள் உட்பட பல வனவிலங்குகள் உள்ளன. காடுகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அருகிலுள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி நுழைகின்றன. இதற்கிடையே, கோவை நரசீபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு நரசீபுரம் பகுதிக்குள் ஒற்றை ஆண் காட்டு யானை நுழைந்தது. அப்பகுதியில் சுற்றித் திரிந்த யானை, இச்சிக்குழி அருகே உள்ள நாகர்கோவில் தோட்டத்திற்குள் நுழைந்தது. பின்னர், அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்த கார்த்திக்கின் வீட்டை காட்டு யானை சேதப்படுத்தியது. இதில், வீட்டின் முன்பக்க சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரையும், வீட்டின் முன்பக்கத்தில் இருந்த பொருட்களையும் யானை சேதப்படுத்தியது. இதனால் பயந்துபோன வீட்டில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டினர்.
காட்டு யானை தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து சேதம் விளைவித்து வருவதாகவும், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.