சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:- என்.எஸ்.எஸ்., என்.சி.சி., சாரணர் மற்றும் வழிகாட்டி, ஜே.ஆர்.சி., போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளால், பள்ளி மாணவர்களை பள்ளிக்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், மாவட்ட, மாநில அளவில், தனித்தனியாக ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமிருந்தும் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும்.
பின்னர் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலரின் முன் அனுமதியின்றி மாணவர்களை பள்ளியை விட்டு வெளியே அழைத்துச் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களை வெளியே அழைத்துச் செல்லும் போது, 10 மாணவர்களுடன் ஒரு ஆண் ஆசிரியர், 10 மாணவிகள் ஒரு பெண் ஆசிரியர் என்றும், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்கள் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவர்களிடம் தவறாக நடந்துகொள்பவர்கள் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை மற்றும் கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.