கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் நகரையே கண்ணீர் மல்க வைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து விஷால் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதில், “முழுமையான முட்டாள்தனம். நடிகர்-அரசியல் கட்சித் தலைவர் விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கேள்விப்படுவது மனவேதனை அளிக்கிறது.

அது முற்றிலும் தவறு. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு அப்பாவி நபருக்கும் என் இதயம் துடிக்கிறது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். இறந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே தவெக கட்சியினருக்கு எனது மனமார்ந்த வேண்டுகோள்.
ஏனென்றால், அந்தக் கட்சியால் செய்யக்கூடிய குறைந்தபட்ச விஷயம் அதுதான். இனிமேல், எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல் பேரணிகளிலும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று நம்புகிறேன்,” என்று விஷால் கூறினார்.