சென்னை: இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானப் பயணிகள் சர்வதேச முனையத்துக்கும், சர்வதேச விமானப் பயணிகள் உள்நாட்டு முனையத்துக்கும், இரு முனையங்களில் இருந்து மெட்ரோ நிலையத்துக்கும் விமான நிலைய வளாகத்தில் உள்ள பயணிகளுக்கு வசதியாக இலவச பேட்டரி வாகனங்களை இயக்கி வருகிறது.
கடந்த ஜூலை மாதம் வரை இந்த பேட்டரி வாகனங்கள் மேற்கண்ட சேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில், ஆகஸ்ட் முதல், உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதிக்கு அருகிலுள்ள பிக்கப் பாயிண்ட் அந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல நிலை கார் பார்க்கிங்கிற்கு மாற்றப்பட்டது. இதனால் இந்த பேட்டரி வாகனங்கள் பல நிலை கார் பார்க்கிங் பகுதிக்கு சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் 9 பேட்டரி வாகனங்கள் மட்டுமே இருந்ததால் அது போதவில்லை. இதனால், பேட்டரி வாகனங்களுக்காக பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால், பல விமானப் பயணிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச டெர்மினல்களில் இருந்து பிக்கப் பாயின்ட்டுக்கு, ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் வரை தங்கள் உடமைகளுடன் நடந்து செல்ல வேண்டியிருந்தது.
இதற்கு பயணிகள் சமூக வலைதளங்கள் மூலம் கடும் கண்டனம் தெரிவித்தும், தொடர்ந்து விமர்சித்தும் வந்தனர். மேலும், பேட்டரி வாகனங்களை ஏற்பாடு செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மேலும் 13 பேட்டரி வாகனங்களை இந்திய விமான நிலைய ஆணையம் வாங்கியுள்ளது.
இவை நேற்று முதல் சென்னை விமான நிலையத்தில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் மூலம் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 22 பேட்டரி வாகனங்கள் இயக்கத் தொடங்கியுள்ளன. அதே சமயம் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பேட்டரி வாகனங்களில் ஏற பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இப்படி காத்திருந்து பேட்டரி வாகனத்தில் ஏறி மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு செல்ல, அங்கிருந்து பயணிகள் லிப்டில் இரண்டு மற்றும் மூன்றாவது தளங்களுக்கு பொருட்களை எடுத்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு பிக்கப் பாயின்ட்டுக்கு செல்கின்றனர். இதனால், கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கு முன் உள்நாட்டு முனையத்தின் வருகைப் பகுதியில் உள்ள பிக்கப் பாயின்டை பழைய இடத்துக்கு மாற்றுவதுதான் பயணிகளின் சிரமங்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.