கரூர்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வர்த்தகர்களின் பொருளாதார முன்னேற்றத்தைக் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” (AABCS) என்ற புதிய திட்டத்தில் தொழில்களுக்கு கடனுதவிக்காக விண்ணப்பிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அரசாணை எண் 33, நாள் 12.05.2023-ன் கீழ் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், உற்பத்தி, சேவை மற்றும் வணிகத் துறைகளில் புதிய தொழில்கள் தொடங்குவோருக்கும், ஏற்கனவே இயங்கி வரும் தொழில்கள் விரிவாக்கம் செய்ய விரும்புவோருக்கும் அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குகிறது. உணவுப் பதப்படுத்தல், தென்னைநார் சார்ந்த தொழில்கள், ஆயத்த ஆடை உற்பத்தி, ரைஸ் மில், ஸ்பின்னிங் மில், மளிகை கடை, அழகு நிலையம், உடற்பயிற்சி மையம், வாடகை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் போன்றவை இத்திட்டத்தில் உட்படுகின்றன.
திட்டத்தின் கீழ், மொத்தத் தொகையின் 35% வரை மானியம் வழங்கப்படுகிறது. உற்பத்தித் தொழில்களுக்கு ரூ.100 லட்சம் வரை, சேவைத்துறைக்குப் ரூ.75 லட்சம் வரை மற்றும் வணிகத் துறைக்குப் ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம். 10 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டிய இந்தக் கடனுக்கு 6 சதவிகித வட்டி மானியம் வழங்கப்படும்.
அதே நேரத்தில், ஈர்த் மூவர்ஸ், ஜேசிபி, டிப்பர், லாரி, டிராக்டர் மற்றும் விவசாய கருவிகள் போன்றவைகள், கட்டுமானம் சார்ந்த தொழில்கள் இந்தத் திட்டத்தில் பெற முடியாது என தொழில் ஆணையரின் கடிதத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் கல்வித் தகுதி அவசியமில்லை. 18 முதல் 55 வயதுக்குள் உள்ளவர்களும், ஒரு குடும்பத்தில் ஒருவரே பயனாளராக இருக்க முடியும். தனிநபர், பங்குதாரர், கூட்டாண்மை மற்றும் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் இந்தச் சலுகையை பெற முடியும்.
விருப்பமுள்ள நபர்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு கரூர் மாவட்ட தொழில் மையத்தில் நேரில் சென்று அல்லது 04324 255177 / 255179 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
கரூர் மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.