கோவை ஈஷா யோகா மையத்தின் 31-வது மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 26-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தென் கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை நடக்கிறது. இதுகுறித்து, சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், பேரவை தொண்டர்கள் மகேந்திரன், சீனிவாசன், இந்து ஆகியோர் கூறியதாவது:-
ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பொதுமக்கள் பங்கேற்கவும், கோவைக்கு வர முடியாதவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஆதியோகியை நேரில் தரிசனம் செய்யவும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி பயணிக்கும் ரத யாத்திரையை கடந்த 11-ம் தேதி கோவையில் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
வடக்கு, மேற்கு நோக்கி பயணிக்கும் ரத யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாச்சல அடிகள், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கடந்த 22-ம் தேதி துவக்கி வைத்தனர். மகா சிவராத்திரிக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ளன. அதுவரை இந்த 2 ரதங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக 30,000 கி.மீ. சென்னையில் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, கோடம்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், நங்கநல்லூர் ஆகிய இடங்களில் ரத யாத்திரை வரும் 30-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதேபோல், தமிழகம், தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிவாங்க பக்தர்கள் ஆதியோகியின் உருவம் தாங்கிய 6 தேர்களை இழுத்து ஈஷாவை நோக்கி வருகின்றனர். இத்துடன் 63 நாயன்மார்களின் திருவுருவங்கள் தாங்கிய தேரும் பாத யாத்திரையாக வருகிறது. ஈஷா மகா சிவராத்திரி விழாவை நேரடியாக ஒளிபரப்ப 50 இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பக்தர்களுக்கு இலவச ருத்ராட்சம் மற்றும் அன்னதானம் வழங்கப்படும். இவ்வாறு கூறினார்கள்.