சென்னை: இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், அக்டோபர் 6-ம் தேதி மெரினா கடற்கரையில் பிரமாண்ட விமான கண்காட்சி நடைபெற உள்ளது.
இதை பார்வையாளர்கள் இலவசமாக கண்டு மகிழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி நாடு முழுவதும் விமானப்படை நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு 92-வது நிறுவன தினத்தை முன்னிட்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டுக்கான தீம் “இந்திய விமானப்படை – சக்ஷம், சஷாக்த், ஆத்மநிர்பர்”. நாட்டின் வான்வெளியைப் பாதுகாப்பதில் இந்திய விமானப் படையின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், இந்திய விமானப்படையின் அனைத்து வகையான 72 விமானங்களும் அன்றைய தினம் ஏரோபாட்டிக் வான்வழி சாதனைகளில் ஈடுபடும்.
இந்த ஏர் ஷோவில் வானில் லாவகமாக பறந்து சிறு துகள்களை தாக்கும் ஆகாஷ் கங்கா குழு, ஸ்கை டைவிங் கலையில் விமானங்கள் மிக அருகில் வரும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், இதில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர் குழு.
வான்வழி நடனம், அவர்களின் ஏரோபாட்டிக்ஸ் மூலம் மக்களைக் கவரும். மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக போர் விமானமான தேஜாஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் பாரம்பரிய பெருமைமிக்க விண்டேஜ் விமானங்களான டகோட்டா, ஹார்வர்டு, அனைத்து வகையான போக்குவரத்து விமானங்களும் அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்த சாகசத்தை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த சாகசமானது இந்திய விமானப்படையின் வலிமை மற்றும் திறன்கள் மற்றும் நாட்டின் வான்வெளியை பாதுகாப்பதில் அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும்.
கடந்த ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை தினத்தன்று பிரயாக்ராஜில் உள்ள சங்கம் பகுதியில் இதுபோன்ற ஒரு வான சாகசம் நடத்தப்பட்டது, இது லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது. இம்முறை சென்னையில் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.