தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானையை கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த பாகன் உதயகுமார் பராமரித்து வந்தார். உதயகுமாரை பார்க்க அவரது உறவினர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சிசுபாலன் வந்துள்ளார்.
சிசுபாலன் யானையின் அருகில் நின்று செல்ஃபி எடுத்து யானையின் உடலை தட்டியதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத யானை சிசுபாலனின் கழுத்தை தும்பிக்கையால் பிடித்து நெரித்தது. உதயகுமார் அவரை காப்பாற்ற முயன்றார். யானை தும்பிக்கையால் தள்ளியதில் உதயகுமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
பின்னர் இருவரும் மிதித்து பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தனர். தகவலறிந்து வந்த பாகன் தொழிலாளர்கள் உதவியுடன் இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
யானை தாக்கி பாகனின் உறவினர் இறந்த தகவல் திருச்செந்தூர் பகுதியில் காட்டுத்தீயாக பரவியது. இச்சம்பவத்தை தொடர்ந்து, யானையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் யானையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் யானை இயல்பு நிலையில் இருப்பதாக மண்டல இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும், திருச்சி, முதுமலை, டாப்சிலிப் ஆகிய 3 யானைகள் மறுவாழ்வு மற்றும் மறுவாழ்வு பயிற்சி மையங்களுக்கு யானையை அனுப்பவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.