
மேட்டூர்: தொடர் மழையால், 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 115.32 அடியாக உயர்ந்தது. நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் இதே அளவில் நீடித்தால் இன்னும் 8 நாட்களில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது. இதன் காரணமாக திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் தயாளகுமார் நேற்று மேட்டூர் அணையின் வலது மற்றும் இடது கரையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சுரங்கப்பாதையிலும் ஆய்வு நடத்தினார். அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில், நீர்வளத்துறை சேலம் கண்காணிப்பு பொறியாளர் சிவக்குமார், மேட்டூர் செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அணையின் வலது மற்றும் இடது கரைகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும், உபரி நீரை வெளியேற்ற தயார் நிலையில் உள்ள குழுக்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.