பந்தலூர்: கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சேரங்கோடு டேண்டி, சிங்கோணா, நர்சரி, படச்சேரி, சேரம்பாடி டேண்டி ஆகிய பகுதிகளில், புல்லட் எனப்படும் ஆண் யானை, 40-க்கும் மேற்பட்ட வீடுகளை தாக்கி சேதப்படுத்தி வந்தது. மேலும் கடைகள், ரேஷன் கடைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்துவது, கண்ணில் பட்ட வாகனங்களை தாக்குவது, மக்களை ஆக்ரோஷமாக துரத்துவது போன்ற செயல்களையும் செய்து வருகிறது.
காட்டு யானையை கும்கிகள் மூலம் மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மயக்க ஊசி போட்டு யானையை பிடிக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையிலான வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் கலைவாணன், ராஜேஷ்குமார் ஆகியோருடன், ட்ரோன் கேமரா மூலம் புல்லட் யானை இருக்கும் இடத்தை கண்காணித்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யங்கொல்லி பாதிரி மூலா பகுதியில் உள்ள 3 வீடுகளை தாக்கிய புல்லட் யானை, அய்யங்கொல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்தது. இதையடுத்து நேற்று அய்யங்கொல்லி பகுதியில் பதுங்கியிருந்த புல்லட் யானைக்கு கும்கி யானைகள் சீனிவாசன், விஜய் உதவியுடன் கால்நடை மருத்துவர்கள் மயக்க ஊசி செலுத்தினர்.
யானை சிறிது தூரம் சென்றதும் கும்கி யானையின் உதவியுடன் புல்லட் யானை அருகே சென்று அதன் கால்களில் கயிறு கட்டி மரத்தில் கட்டினர். பின்னர் இன்று காலை லாரியில் ஏற்றி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடல் பரிசோதனைக்கு பின் புல்லட் யானையை அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.