தஞ்சாவூர்: தஞ்சாவூர் நிஃப்டெம்மில் ஜன. 3 ல் வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்குகிறது என்று இயக்குநர் வி.பழனிமுத்து தெரிவித்தார்.
தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் (நிஃப்டெம்மில்), வரும் ஜன.3, 4 ஆகிய இரு நாட்களும் வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெறவுள்ளது என நிறுவன இயக்குநர் வி.பழனிமுத்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களின் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் சார்ந்த வணிக சாத்தியக்கூறுகளை மேம்படுத்தும் வகையில், அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரி ஆஃப் இந்தியா (ASSOCHAM), தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம்(NIFTEM-T), தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEX), மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (MoFP1) ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ‘வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி 2025″ நிகழ்ச்சியை நிஃப்டெம் நிறுவன வளாகத்தில் ஜன. 3-4, ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது.
இந்த மாநாட்டில், அரசு, தொழில், விவசாயம் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்த முக்கிய வல்லுநர்கள் பங்குகொண்டு, உணவு பதப்படுத்துதலில் தொழில்நுட்ப வளர்ச்சி, ஸ்டார்ட்-அப்களை செயல்படுத்துதல், திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு உருவாக்கம், சந்தை மற்றும் ஏற்றுமதி மேம்பாடு, திட்டமிடல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள், வேளாண் உற்பத்தி பொருட்களை மதிப்பு கூட்டுதல், சந்தை வாய்ப்பு, வியாபார அணுகுமுறை உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
அரசு, தொழில் மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள், உணவு சார்ந்த முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் யோசனைகளை வழங்குகிறார்கள். இது புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு மிகவும் சிறந்த வாய்ப்பாகும். தொழில் வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். ஏற்றுமதி ஊக்குவிப்பு, தயாரிப்பு மேம்பாடு மற்றும் சந்தை அணுகல், பிராண்டிங், பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி பட்டறைகள் நடக்கவிருக்கின்றன. இதன் வாயிலாக பல்வேறு விதத்திலும் தொழில் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ளலாம்.
மேலும் பொருட்களை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் சந்திப்பு, வணிகத்திலிருந்து வணிகம் மற்றும் வணிகத்திற்கான வாடிக்கையாளர் சந்திப்பு ஆகியவை தொழில் முனைவோர்களுக்காக நடத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கான வேளாண் தொழில்துறை மற்றும் விவசாய-உணவு சார் தொழில்துறை நிறுவனங்கள், மேம்படுத்த நிதியளித்தல் உட்பட பல தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைப்பெற உள்ளன.
இரண்டு நாள் கண்காட்சியில் சுமார் 10,000 பார்வையாளர்கள், 700 முதல் 1,000 விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சுமார் 300 உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள், வேளாண் தொழில்துறை இயந்திர உற்பத்தியாளர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSMEs) பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய துறைகளை காட்சிப்படுத்தும் ஸ்டால்கள் இடம்பெறவுள்ளது. நிஃப்டெம்மில் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் இயந்திரங்களின் செயல்விளக்கமும் இடம்பெறவுள்ளது என்றார்.
அப்போது, அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் மற்றும் இன்ட்ஸ்ட்ரி ஆஃப் இந்தியா இயக்குநர் அனுப்பிள்ளை, டீன் (மாணவர் நலன்) ஜெகன்மோகன், பதிவாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம், டீன் (ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பன்னாட்டு தொடர்பு) வெங்கடாஜலபதி ஆகியோர் உடன் இருந்தனர்.