கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தென் தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை ரூ.500க்கும், பிச்சி ரூ.600க்கும், சம்பங்கி ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு இன்று பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.800க்கும், மல்லிகைப் பூ கிலோ ரூ.1000க்கும், அரளிப்பூ கிலோ ரூ.100க்கும், வாடாமல்லி கிலோ ரூ.100க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.50க்கும், சம்பங்கி கிலோ ரூ.200க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.800க்கும், ரோஸ் கிலோ ரூ.100க்கும் விற்பனையாகிறது. மேலும், ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.250க்கும், துளசி கிலோ ரூ.40க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.5க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.150க்கும், செவ்வந்தி கிலோ ரூ.250க்கும் விற்பனையாகிறது.
இதுகுறித்து உள்ளூர் வியாபாரிகள் கூறுகையில், “நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில் இன்றைய தினம் சில பூக்களின் விலை சிறிது உயர்ந்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரத்தில் ஆனி மாதத்தின் கடைசி முகூர்த்த நாட்கள் வருவதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆடி மாதம் துவங்குவதற்கு முன்பாக ஜூலை 12ஆம் தேதி தான் கடைசி முகூர்த்தம் என்பதால் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. பூக்கள் நல்ல விளைச்சல் இருக்கும் நிலையில் விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்.