சென்னை: ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு விமான நிறுவனம் கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளது. 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை அதன் விமானங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, வழக்கமான எக்கனாமி வகுப்பு இருக்கைகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு கட்டணத்தில் 15 சதவீத தள்ளுபடி, வணிக வகுப்பு இருக்கைகளில் 20 சதவீத தள்ளுபடி மற்றும் எக்ஸ்பிரஸ் வணிக வகுப்பு பயணிகளுக்கு 25 சதவீத தள்ளுபடி கிடைக்கும். ஆகஸ்ட் 1 நள்ளிரவு 11.59 மணி வரை இந்த தள்ளுபடி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

இதற்காக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளமான www.airindiaexpress.com மற்றும் மொபைல் செயலியில் உள்நுழைந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இத்தகைய தள்ளுபடி கட்டணத்தில் பெறப்பட்ட விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி மார்ச் 31, 2026 வரை எந்த நேரத்திலும் விமானத்தில் பயணிக்கலாம். மேலும், பயணிகள் தங்கள் சாமான்களை எடுத்துச் செல்ல தாராளமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வணிக வகுப்பு மற்றும் எக்ஸ்பிரஸ் வணிக வகுப்பு பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்றும், எகானமி சாதாரண கட்டணத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு தள்ளுபடி விலையில் உணவு வழங்கப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது. ஜூன் 12 அன்று, குஜராத்தின் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக, பெரும்பாலான பயணிகள் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணிப்பதைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
எனவே, தங்கள் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், கட்டண தள்ளுபடிகள், கட்டணங்கள் மற்றும் இலவச உணவுகள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டு பயணிகளை ஈர்க்கிறார்களா என்று பயணிகள் கேள்வி எழுப்புகின்றனர்.