சென்னை: சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறங்க வேண்டியிருந்தது. நேற்று காலை 8 மணிக்கு 70 பயணிகளுடன் சென்னையிலிருந்து மதுரைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார்.

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை உடனடியாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானத்தை சென்னைக்குத் திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, விமானம் காலை 9 மணியளவில் சென்னையில் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டு விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரிசெய்ய விமானப் பொறியாளர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தனர். இதற்கிடையில், அனைத்து பயணிகளும் மாற்று விமானத்தில் மதுரைக்கு அனுப்பப்பட்டனர்.