சென்னை: இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. புதிய கட்டண உயர்வு ஜூலை 3 முதல் அமலுக்கு வருகிறது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் என்ற செய்தி தேர்தலுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) ஜியோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்தது. இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ஏர்டெல் நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
ஜியோ ரீசார்ஜ் கட்டணங்கள் 12 முதல் 27 சதவீதம் உயர்வு: சுமார் 47 கோடி மொபைல் சந்தாதாரர்களைக் கொண்ட இந்தியாவின் டெலிகாம் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது ரீசார்ஜ் கட்டணத்தை 12 முதல் 27 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு ரீசார்ஜ் கட்டணத்தை ஜியோ உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, குறைந்தபட்சம் 1ஜிபி தினசரி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி பேக் கொண்ட வரம்பற்ற அழைப்புகளுக்கு கட்டணம் ரூ.209ல் இருந்து ரூ.249 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஜியோ தற்போது ரூ.349 (28 நாட்கள்) மற்றும் அதற்கு மேற்பட்ட பேக்குகளை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அன்லிமிடெட் 5ஜி நெட்வொர்க் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஏர்டெல் ரீசார்ஜ் கட்டணங்கள் 10 முதல் 21 சதவீதம் அதிகரிப்பு: பார்தி ஏர்டெல் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் அடிப்படை ரீசார்ஜ் பேக் 1ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய வரம்பற்ற அழைப்புகள் ரூ.179ல் இருந்து ரூ.199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளுக்கான 28 நாட்கள் வேலிடிட்டி பேக்கிற்கான விலை ரூ.265ல் இருந்து ரூ.299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது ப்ரீபெய்டு பயனர்களுக்கான ரீசார்ஜ் கட்டணங்களில் அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. போஸ்ட்பெய்டு திட்டக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
மொபைல் போன் சேவைகளுக்கான 10வது ஸ்பெக்ட்ரம் ஏலம் சமீபத்தில் முடிந்த நிலையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. வோடபோன் ஐடியாவும் வரும் நாட்களில் ரீசார்ஜ் கட்டணத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.