சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமார், போலீசாரின் கொடூரமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட அஜித் குமார், காவல் நிலையத்தில் மிளகாய்ப் பொடி தண்ணீரில் கொடுக்கப்பட்டு, தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுநீரில் ரத்தம் வெளியேறி உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டதோடு, இழப்பீடு, அரசுப் பணி, நிலம் ஆகியவையும் வழங்கப்பட்டன. முக்கியமாக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என்பது turning point ஆக அமைந்தது.
சிபிஐ விசாரணை அதிகாரியாக டெல்லியைச் சேர்ந்த மோகித் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம், ஆகஸ்ட் 20க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ள நிலையில், ஜூலை 14 முதல் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக கடந்த 2 நாட்களாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். முக்கிய சாட்சிகளான அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமார், நண்பர்கள் அருண் குமார், வினோத், பிரவீன், மற்றும் கார்த்திக் வேல் ஆகியோர் மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர்.
அருண் குமார் மற்றும் வினோத் ஆகியோர் அஜித் குமாருடன் காவல் விசாரணையில் இருந்தவர்கள் என்பதால், அந்த நேரத்தில் நடந்த சம்பவங்களை சிபிஐ தீவிரமாக விசாரித்துள்ளது.
மேலும், திருப்புவனம் காவல் நிலையம் அருகிலுள்ள மடப்புரம் காளி கோவிலின் சிசிடிவி காட்சிகளும் சிபிஐயால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, நிகிதாவின் நகை திருட்டு வழக்கும் சிபிஐ விசாரணையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவ்வாறு விசாரணை தீவிரமடைந்த நிலையில், குற்றச்சாட்டு கேள்வி எழுந்து வரும் உயர் அதிகாரிகள் யார்?, அவர்கள் உத்தரவால் தாக்குதலா? என்ற கேள்விகளுக்கு வரும் நாட்களில் பதில்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.