திருப்புவனத்தில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித் குமார், காவல்நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து, பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு அப்பாவி இளைஞனை படுகொலை செய்துவிட்டு, ‘சாரி மா’ என்று ஒரு வார்த்தையால் தப்பித்துக்கொள்ள முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இது ஒரு முதல்வரின் பொறுப்புள்ள செயலா? என்றதும் அவரது சாடல் கேள்விகளில் ஒன்றாகும்.
முதல்வர் நேரில் சென்று அஜித் குமார் தாயிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒரு நாடகம் போல வெட்டி ஒட்டப்பட்டதாகவும், உண்மையான வருத்தமும், பொறுப்பும் எங்கு இருக்கிறது? என்றும் நயினார் கேட்டுள்ளார்.
மேலும், ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் காவல் பாதுகாப்பில் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த 23 பேர் பற்றிய பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார். இதில் நாமக்கல், திருநெல்வேலி, சென்னை, மதுரை, புதுக்கோட்டை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இவ்வாறான மரணங்களில், போலீசாரின் மோசமான நடவடிக்கைகள், அரசின் தவறான கண்காணிப்பு ஆகியவை காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மரணங்கள் மீதான அரசியல் செவிமடுக்காமை தொடர்ந்தால், அரசு நியாயத்தை வழங்க மறுக்கும் விதமாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இத்தகைய கொடூரச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், காவல்துறையில் நிரந்தர பொறுப்புணர்வு மற்றும் கண்காணிப்பு முறைமை அமைய வேண்டிய அவசியம் அதிகம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.