மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், காவல்துறையினரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அவரது தம்பி நவீன் குமார் தற்போது உடல்நலக்குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் பின்னணி விசாரிக்கும்போது, நிகிதா என்ற பெண், தனது தாயின் 10 சவரன் நகை காணவில்லை என புகார் அளித்த நிலையில், அஜித் குமாரின் மீது சந்தேகம் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். விசாரணைக்குள் காவல்துறையினர் கைதடி முறையில் தாக்கியதால், அஜித் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். பிரேத பரிசோதனையில் 44 காயங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த கொடூரச் சம்பவத்தில் 5 தனிப்படை காவலர்கள் – பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவாகி, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. அரசு, இந்த விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அஜித் குமாரின் தம்பி நவீன் குமாரும் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படுவதால், அவரது உடல்நிலை மோசமானது. தற்போது மருத்துவமனையில் தீவிர பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த சம்பவத்தில் அஜித்தின் தாய் போலீசார்தான் தங்கள் இருவரையும் தாக்கியதாகவும், அதனாலேயே நவீனுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.