சென்னை: தமிழகத்தில் தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியால் ஒவ்வொரு ஆண்டும் மின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வரும் கோடை காலத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்க மாதம் ஒன்றுக்கு கூடுதலாக 2000 மெகாவாட் வாங்க ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் கோடைகால மின் தேவையை சமாளிக்க வெளிமார்க்கெட்டில் மின்சாரம் வாங்க, மின் வாரியத்துக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கோடைகால மின் தேவையை சமாளிக்க, வெளிமார்க்கெட்டில், 8,525 மெகாவாட் மின்சாரம் வாங்க, மின் வாரியத்துக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக, அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- வரும் கோடை காலத்தில் தமிழகத்தின் மின் தேவை 22,000 மெகாவாட்டிற்கு மேல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிப்ரவரி 15-ம் தேதி முதல் மாதம் 2,000 மெகாவாட் மின்சாரம் வாங்க ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், மார்ச், ஏப்ரல், மே 15-க்குள் உச்சகட்ட தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக 1,000 மெகாவாட் தேவைப்படும். அதன்படி, வெளிமார்க்கெட்டில் இருந்து 8,525 மெகாவாட் மின்சாரம் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான மின் தேவையை சமாளிக்க வெளிமார்க்கெட்டில் இருந்து மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோடை சீசனில் உச்சகட்ட தேவையை சமாளிக்கும் வகையில் தமிழக மின்வாரியத்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, மே 2, 2024 அன்று 20,830 மெகாவாட் மின் தேவை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கடந்த ஆண்டு ஏப்ரல் 30 அன்று அதிகபட்ச தினசரி நுகர்வு 454.320 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தது, மேலும் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உச்ச மின் தேவை இந்த எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.