சென்னை: காஷ்மீரில் சுற்றுலா சென்ற அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
காஷ்மீரில் நடந்த அட்டூழியங்கள் அதிர்ச்சியளிக்கிறது. புலனாய்வுத் துறையின் தோல்வியை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துகிறது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டால், காஷ்மீரில் தீவிரவாத செயல்கள் இருக்காது என பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கி பயங்கரவாதத்தை ஒடுக்கியுள்ளோம். இனிமேல் சுற்றுலா பயணிகள் தாராளமாக காஷ்மீருக்கு செல்லலாம் என்று கூறி வந்தனர்.

மத்திய அரசு சொன்னதை நம்பிய சுற்றுலா பயணிகள் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் பொறுப்பு. “அமித்ஷா உடனடியாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.