மதுரை மாநகரில் நடைபெற்ற பாஜக மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முக்கிய உரையாற்றினார். தனது உரையின் போது, பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலாக முப்படைகள் நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை அவர் சிறப்பாகக் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கைக்கு தமிழகத்திலிருந்து பெரும் ஆதரவு கிடைத்ததாகவும், மக்கள் உணர்வில் தாய்நாட்டு பற்றும், தேசபக்தியும் வலிமையாகவே இருப்பதை இது உணர்த்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

அப்பாவி மக்களை மதத்தின் பெயரில் கொடூரமாக கொன்ற பயங்கரவாதிகளை அவர்களது நாட்டுக்குள் நுழைந்து முப்படைகள் அழித்ததையே பிரதமர் மோடி தலைமையிலான அரசு உலகுக்கு காட்டியுள்ளது. இது தான் அவர்களுக்கு நாம் கற்றுக்கொடுத்த பாடம் என அமித்ஷா கூறினார். கடந்த காலங்களில் இவ்வாறான தாக்குதல்களுக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பதிலளிக்காமல் இருந்ததையும் அவர் விமர்சித்தார்.
ஆனால் தற்போது, புரிரி, புல்வாமா, பஹல்காம் ஆகிய தாக்குதல்களுக்கு மோடி அரசு தக்க பதிலடி அளித்து, இந்தியாவின் ராணுவ பலத்தையும், தீரத்தையும் உலகம் முழுவதும் உணர வைத்துள்ளது. பாகிஸ்தானில் பதுங்கிய பயங்கரவாத முகாம்களை கூட இந்திய ராணுவம் தாக்கி நிலவாளாக்கியது. எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் உள்ளே சென்று நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் தன்னிறைவையும், வலிமையையும் நிரூபித்தது.
அமித்ஷா மேலும், இப்போது நாட்டில் வான்வெளி சாதனைகளும் பெரிதும் பேசப்படுகிறதெனக் கூறினார். ‘காவேரி என்ஜின்’ பற்றிய விவாதம் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பாகிஸ்தானின் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை அழித்து தூள்தூளாக்கிய நிகழ்வுகள் இந்தியாவின் வான்வெளி வல்லமையை உறுதிப்படுத்தியுள்ளன.
“ஆபரேஷன் சிந்தூர்” இன்னும் முடிவடையவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளதாகவும், மீண்டும் பயங்கரவாதிகள் தாக்கினால் அவர்களின் வீடு புகுந்து அழிக்கப்படுவார்கள் எனத் தன்னம்பிக்கையுடன் அமித்ஷா நினைவூட்டினார். இது மட்டும் இல்லாமல், தேசப்பற்று கொண்ட ஒவ்வொருவரும் இந்த அரசின் முயற்சிகளுக்கு கைகொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.