ராணிப்பேட்டை/அரக்கோணம்: மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) தினத்தையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடல் வளங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிஐஎஸ்எஃப்-ன் பெருமையை பறைசாற்றும் புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் சிஐஎஸ்எப் தேர்வை எழுத முடியும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவம், பொறியியல் மற்றும் பிற படிப்புகளை தமிழில் படிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் விரைவில் இதைச் செய்வார் என்று நான் நம்புகிறேன்.

ஏனென்றால் கடந்த இரண்டு வருடங்களாக இதை வலியுறுத்தி வருகிறேன். பிரதமர் மோடி தமிழுக்கும் அதன் பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் தருகிறார். தமிழ்நாட்டின் செழுமையான கலாச்சாரம் இந்திய பாரம்பரியத்தை வலுப்படுத்தியுள்ளது. 2047-க்குள் இந்தியாவை வல்லரசாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி சபதம் செய்துள்ளார். 2027-க்குள் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த இலக்குகளை அடைவதற்கு சிஐஎஸ்எப் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. கடந்த 56 ஆண்டுகளாக சிஐஎஸ்எஃப்-ன் சேவை அளப்பரியது. நாட்டின் பெரிய தொழில்துறை கட்டமைப்புகள், பொது போக்குவரத்து, சுற்றுலா தளங்கள், ஆராய்ச்சி மையங்கள் என அனைத்திலும் சிஐஎஸ்எப்ன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நாளும் நாட்டில் சுமார் 1 கோடி மக்களின் பாதுகாப்பான பயணத்தை சிஐஎஸ்எப் உறுதி செய்கிறது. இவ்வாறு அமித் ஷா கூறினார்.
முன்னதாக இன்று மு.க. ஸ்டாலின் ‘இந்தி திணிப்பை எதிர்ப்போம்’ என்ற தலைப்பில் திமுகவினருக்கு 10-வது கடிதம் எழுதிய “திமுக எந்த மொழிக்கும் எதிரி அல்ல; வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் மொழிகளை மட்டுமே எதிர்ப்போம் என்ற கொள்கையை நாங்கள் நடைமுறை ரீதியில் கடைபிடித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.